ஈன்றெடுத்த தாயின் மகனை சான்றோனாக்கி ஆன்றோர் முன்னிலையில்- இவன் போன்றோர் இல்லையென பெரிதுவக்கும் - உலக மன்றமே வியக்கும் மாணவனை வென்றெடுக்க வைக்கும் உன்னதம் நல்லதோர் குருவின் மகா உன்னதம்
மானுடக்குழந்தையின் ஒவ்வொரு மனமும் தெளிந்த நீரோடை தான் -ஆனால் அதில் கல்லெறிந்து கலங்க வைக்கவும் தீயோனின் கழிவை கலக்கவும் தாராளமாய் முன்னேறும் கீழியக்க சக்திகள் ஏராளம் ஏராளம்......!!!-அதனை அடித்து முறுக்கி ஆயுதமாக்கி ஆக்கத்தை நோக்கி அலைபாய வைக்கும் திறம் நல்ல ஆசானின் வரம்....!
காட்டாறாய் புறப்படும் இளமையின் ஆற்றலை அணைக்கட்டாய் தடுத்து வழிமுறை வகுத்து-நல் விளைநிலம் நோக்கி மானுடத்தின் வளம் செழிக்க களமாட அனுப்பப்படும் வீரன்(மாணவன்) நல்ல குருவின் திறன்.........
தரம் மாறிச்சென்ற தாயிற்கு பிறந்த கருக்கூட-நல்லக் குருவிற்கு திறந்தாலே போதும் தீயோனின் அறைவரை சென்று அறம் போதிக்கும்
அகம் புறம் இரண்டிலும் அழுக்காறு அகற்றி இருளுடமை இயலாமையை இல்லாமை ஆக்கி இறையுணர்வு புகுத்த ஒளியாய் இருந்திடும் ஒப்பிலா பணி குருவுடையது......
இத்தகு குருவின் சொல்லை எத்தகு சூழலிலும் - நல் வித்தாக ஏற்று செல்லலே சொத்தாகும் உண்மையான மாணவனுக்கு... குருவின் சொல்லை பின்பற்றலும் அவரின் கூர் உணர்வுடன் செயலாற்றலும் நானிலம் போற்றும்படி வாழ்தலும் நால்வர் வாழ்வினை சிறக்க வைத்தலும் இன்றைய சீடனின்(மாணவனின்) நன்றி நவிலும் நன்னெறியாகும்....
திசையேதும் புரியாமல்-உலகம் வசபடுத்த முயன்றத்திசையில் போக முயன்ற-இந்த கலியுகக் கருவை,
புகழும் களிப்புமே பூலோக பிறவியின் நோக்கமென்று கல்வியையும் கலையையும்-அதற்காய் அடித்தளமாக்க முயன்ற -இந்த மாணவனின் அகத்திணை திறந்திட வைத்து திசைமாற வாழ்வுதனில் செல்ல-எனை உங்கள் அன்பின் வசமாக்கி அனுதினமும் எந்தன் சிந்தையை செப்பனிட்டு என்னை இந்நிலைக்கி உயர்த்திட்ட என் வாழ்வின் ஒவ்வொரு நிலை குருவிற்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்....!!!